நவிமும்பையில் உள்ள பாலத்தில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை புகழ்ந்து எழுதப்பட்ட வாசகங்களால் பரபரப்பு


நவிமும்பையில் உள்ள பாலத்தில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை புகழ்ந்து எழுதப்பட்ட வாசகங்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Jun 2019 4:01 AM IST (Updated: 5 Jun 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பை பாலத்தின் தூண்களில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட வாசகங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மும்பை,

நவிமும்பை உரண் பகுதியில் உள்ள பாலத்தின் தூண்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபு அல் பக்தாதி மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆகியோரை புகழ்ந்து வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் போலீசுக்கு தெரியவரவே, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் பயங்கரவாத தடுப்பு படை போலீசாரும் அங்கு வந்தனர். பயங்கரவாதிகளை புகழ்ந்து எழுதிய வாசகங்கள் யாருடைய சதி வேலையாக இருக்கும் என்று போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து, முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். குறிப்பாக நவிமும்பையில் ஜவஹர்லால் நேரு துறைமுகம் உள்ளது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் நவிமும்பை மற்றும் மும்பை பகுதிகளில் உள்ள மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பாலத்தின் அடியில் மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே இது குடிகாரர்களின் கைவரிசையாக இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story