அரசு பள்ளிக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தரக்கோரி வகுப்பை புறக்கணித்து மாணவ– மாணவிகள் போராட்டம்
அரசூரில் அரசு பள்ளிக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தரக்கோரி வகுப்பை புறக்கணித்து மாணவ– மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரையுள்ள இந்த பள்ளியில் அரசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் இங்கு படிக்கிற மாணவ– மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் எனவே சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று மாணவ– மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர், பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது குடிப்பது, சூதாடுவது உள்ளிட்ட பலவித சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாணவ– மாணவிகள் குற்றம் சாட்டி வந்ததோடு, இதை தடுத்து பாதுகாப்பு வசதி செய்து தரக்கோரி வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ சிலர், இப்பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது குடித்துவிட்டு காலி மதுபான பாட்டில்களை உடைத்து போட்டு சென்றுள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ– மாணவிகள், இதனை பார்த்து முகம் சுழித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், பள்ளியில் உரிய பாதுகாப்பு வசதியை செய்து தர கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவ– மாணவிகள் சிலர் வகுப்புகளுக்கு செல்லாமல் வகுப்பை புறக்கணித்துவிட்டு காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார், அந்த பள்ளிக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ– மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
அதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை தாசில்தார் வேல்முருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ– மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டித்தந்து பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி கொடுப்பதாகவும், தினமும் பள்ளி அருகில் போலீசார் ரோந்துப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்ற மாணவ– மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வகுப்புக்கு சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.