அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை சாவு: நர்சு மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை சாவு: நர்சு மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை சாவு: நர்சு மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.

ஜீயபுரம்,

திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள பெருகமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 1-ந் தேதி பிரசவத்திற்காக பெருகமணி நடுத்தெரு பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி அயிணா (வயது 25) அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் இல்லாததால் நர்சு பிரசவம் பார்த்தார். அப்போது, அயிணாவுக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால், அவருடைய உறவினர்கள் பிரசவம் பார்த்த நர்சு மற்றும் ஆயா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டம் செய்தனர். இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து எடுத்து 4 வார காலத்திற்குள் பதிலளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை பெருகமணி கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வினோத்மணி ஆகியோர் பேசினர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறப்பிற்கு காரணமான நர்சு மற்றும் ஆயா மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நாய்க்கடி, பாம்பு கடி உள்ளிட்டவைகளுக்கு தேவையான மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள், சாலை மறியல் செய்ய முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் சாலை மறியலை கைவிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story