மோடிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு தமிழகத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது இல.கணேசன் பேட்டி


மோடிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு தமிழகத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2019 4:45 AM IST (Updated: 7 Jun 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

மோடிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு தமிழகத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்று திருக்கடையூரில், இல.கணேசன் கூறினார்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரதீய ஜனதா வெறும் அரசியல் கட்சி அல்ல. பாரத நாட்டிற்கும், பாரத மக்களுக்கும் எதை செய்ய வேண்டுமோ அதற்கான அரசுதான் மோடி அரசு. ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன், ஸ்டெர்லைட் ஆகிய திட்டங்கள் எல்லாம் இதற்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு கையெழுத்திட்ட திட்டம்.

ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பிரச்சினைகளையெல்லாம் மோடிக்கு எதிராக திசை திருப்பி விட்டார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு தமிழகத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மேலும் காங்கிரஸ் அரசு, அந்தந்த நேரத்தில் மக்களை திருப்திபடுத்துவதற்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தாமல் விட்டு விட்டது. சுமார் 316 திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி எதுவும் செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டது. தற்போது மோடி தலைமையிலான அரசு, அந்த திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வழியாக வேதாரண்யம் வரையில் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க மத்திய அரசுக்கு இரண்டு ஆண்டிற்கு முன்பே கடிதம் எழுதியுள்ளேன். இது பொதுமக்களின் பல வருட கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி மீண்டும் செயல்படுத்த பாடுபடுவோம்.

கோதாவரி நதி நீர் திட்டம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். இந்த நதி நீர்திட்டத்தை செயல்படுத்துவதற்கு குறைந்தது மூன்று வருட காலம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். இந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று 2 மாணவிகள் தற்கொலை செய்தது மனதிற்கு வருத்தமாக உள்ளது. அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது நாகை மாவட்ட பொதுச்செயலாளர் அமிர்த விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story