நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சங்கு ஊதி போராட்டம்


நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சங்கு ஊதி போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:30 AM IST (Updated: 7 Jun 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இந்த 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. இத் திட்டத்தின் மூலமாக கழிவுநீர், குழாய்கள் மூலம் நகராட்சி புல் பண்ணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு சுத்திகரிப்பு நிலையம் மூலமாக கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டம் கடந்த சில மாதமாக செயல் படுத்தப்பட்டாலும் தற்போது வரை வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக முறையாக செயல்படுத்தப்படாததால், ஆங்காங்கே பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை 40-வது வார்டுக்கு உட்பட்ட வட்டாப்பட்டியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கடந்த சில மாதங்களாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கும் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் ஓடுவதை சரிசெய்யாத நகராட்சியை கண்டித்து சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பஸ் மறியல் உள்ளிட்ட பல போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர். புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story