தவணை தொகை செலுத்த முடியாததால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து சாவு


தவணை தொகை செலுத்த முடியாததால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 7 Jun 2019 3:45 AM IST (Updated: 7 Jun 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தவணை தொகை செலுத்த முடியாததால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து இறந்தார். மற்றொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 43), ஆட்டோ டிரைவர். இவர் கடன் மூலம் ஆட்டோ வாங்கி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அவரால் ஆட்டோ கடனுக்குரிய தவணைத்தொகையை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். அவருடைய மனைவி அவரை சமாதானப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆட்டோவில் சவாரிக்காக சென்றவர் மதியம் செல்போன் மூலம் மனைவியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இனிமேல் தன்னை தேடவேண்டாம் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவருடைய மனைவி உறவினர்கள் மூலம் அய்யப்பனை தேடினார்.

இந்தநிலையில் நாகர்கோவில் கே.பி.ரோடு காமராஜர் நகர் பகுதியில் அய்யப்பனின் ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார், அய்யப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவருடைய தம்பி செல்வன் (42) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் கோணம் தொல்லவிளையைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (72). இவர் கடந்த சில தினங்களாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story