திண்டுக்கல்லில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது


திண்டுக்கல்லில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 7 Jun 2019 3:30 AM IST (Updated: 7 Jun 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.

திண்டுக்கல்,

தமிழக அரசு சார்பில் படித்த, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்துவதற்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இந்த முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளன.

இதில் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களின் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் மற்றும் அதன் நகல்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விவரத்தினையும், தொழிற் பழகுனர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விவரத்தினையும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொலைபேசி எண்ணில் (0451-2461498) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த முகாம் மூலம் பணியமர்த்தப்படுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அரசு துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முகாமில் கலந்து கொள்ளும் பதிவுதாரர்களின் வேலை வாய்ப்பு அலுவலக இணையதள பதிவில் விடுபட்டவர்கள் மற்றும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக சரிசெய்து தரப்படும். எனவே இந்த வேலைவாய்ப்பு முகாமை தனியார் நிறுவனங்கள், வேலை வாய்ப்பற்றவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story