தேனி நர்சிங் மாணவி சாவில் திருப்பம்: தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது


தேனி நர்சிங் மாணவி சாவில் திருப்பம்: தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது
x
தினத்தந்தி 7 Jun 2019 3:50 AM IST (Updated: 7 Jun 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் தவமணி. இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். இவர்களுடைய 2-வது மகள் நர்மதா (வயது 19). தவமணி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தமிழ்செல்வி துணி தேய்க்கும் தொழில் செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார். இதில், நர்மதா ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார்.

இவரும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தவசித்தேவன்பட்டியை சேர்ந்த இவருடைய மாமா அக்னி மகன் பைரவன் (20) என்பவரும் காதலித்து வந்தனர். பைரவன் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் துணி தேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்தநிலையில், கடந்த 3-ந்தேதி நர்மதா தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், தனது புகைப்படத்தை பைரவன் முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும், தனது சாவுக்கு அவர் தான் காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில், தற்கொலை என்று முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தனது மகள் சாவுக்கு காரணமான பைரவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்செல்வி தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசாரும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக நர்மதாவின் காதலன் பைரவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story