தூங்கிக் கொண்டிருந்த தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 16 பவுன் நகை, பட்டு சேலைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நாட்டறம்பள்ளி அருகே தூங்கிக் கொண்டிருந்த தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 16 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பட்டு சேலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி,
நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளாளனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 32). இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பாபு சொந்த ஊருக்கு வந்தார். இரவில் பாபு, அவரது மனைவி ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த தம்பதி மீது மயக்க மருந்து தெளித்ததாக தெரிகிறது. பின்னர் அறையில் உள்ள பீரோவை திறந்து, அதில் இருந்து 16 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.8 ஆயிரம் மற்றும் பட்டு சேலைகளை கொள்ளையடித்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து நேற்று காலையில் கணவன் - மனைவி இருவரும் எழுந்து பார்த்த போது, வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பாபு நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story