நாமக்கல், குமாரபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நாமக்கல், குமாரபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல்,
ஈஷா பசுமை கரங்கள் திட்டம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு 50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் ஒருபகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தை சுற்றிலும் போலீசாரும், ஈஷா அமைப்பின் தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பாக ஜம்புமடை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர்கள், பண்ணை மேலாளர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களை கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்போம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதேபோல் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை அறிவியல் நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேசிய பசுமைப்படை, தேசிய மாணவர் படை மற்றும் விடியல் ஆரம்பம் கல்வி சேவை அமைப்பு ஆகியவற்றின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது பள்ளி வளாகத்தை சுற்றிலும் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, அந்தோணிசாமி, மணிகண்டன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்களும், விடியல் ஆரம்பம் அமைப்பு தலைவர் பிரகாஷ், வட்டமலை சண்முகம் மற்றும் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story