கீரனூரில் பலத்த மழை: மின்னல் தாக்கியதில் தொழிலாளி பலி


கீரனூரில் பலத்த மழை: மின்னல் தாக்கியதில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 Jun 2019 4:00 AM IST (Updated: 7 Jun 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

கீரனூரில் பலத்த மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் இடி சத்தம் கேட்ட அதிர்ச்சியில் கொத்தனாரும் இறந்தார்.


கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. பின்னர் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த சூறாவளி காற்றுடன் கூடிய மழையால் பல பகுதிகளில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன.

கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தன. கீரனூரை அடுத்த உறவிக்காடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டு இருந்தபோது, மின்னல் தாக்கியதில் பரிதாபமாக செத்தது.

இதேபோல் மேலப்புது வயலை சேர்ந்த கொத்தனாரான சங்கரன் (வயது 45) பலத்த இடி சத்தம் கேட்ட அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார். கண்ணங்குடியை சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியதாஸ் (49) மற்றும் மலர் (47), வசந்தா (45) ஆகிய 3 பேரும் காயம்பட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பலத்த மழை பெய்ததால், ஆரோக்கியதாஸ் உள்பட 3 பேரும் கட்டிடத்தின் அருகே ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.

அப்போது மின்னல் தாக்கியதில் ஆரோக்கியதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மலர், வசந்தா இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஆரோக்கியதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story