நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தில், தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேட்டி


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தில், தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2019 10:45 PM GMT (Updated: 7 Jun 2019 9:58 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் குரல் எழுப்புவார்கள் என்று எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கூறினார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன். இவருடைய மகள் வைசியா(வயது17). பிளஸ்–2 முடித்திருந்த வைசியா மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவருக்கு நீட் தேர்வில் 720–க்கு 230 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனம் உடைந்த வைசியா சம்பவத்தன்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., பட்டுக்கோட்டையில் உள்ள மாணவி வைசியா வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பிளஸ்–2 தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றும் 25 நாளில் நீட்தேர்வு வைத்ததால் நன்கு படித்த மாணவிகள் கூட தேர்ச்சி அடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை மாணவ–மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வசதி படைத்தவர்கள் யாரும் இதைப்பற்றி கவலைப்படவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்ய நாங்கள் பாடுபடுவோம். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் குரல் எழுப்புவோம். இதற்காக நாடாளுமன்றத்தில் நாங்கள், எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம். அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத நிலையை ஏற்படுத்த பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் அண்ணாத்துரை, நகர தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்குமார், தலைமை கழக பேச்சாளர் மணிமுத்து மற்றும் பலர் இருந்தனர். இதைப்போல பட்டுக்கோட்டைக்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் மாணவி வைசியா வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.


Next Story