பயிர்காப்பீட்டு தொகை கேட்டு சிறுபாக்கம் பஸ்நிலையத்தில் விவசாயிகள் போராட்டம்
பயிர்காப்பீட்டு தொகை கேட்டு சிறுபாக்கம் பஸ்நிலையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுபாக்கம்,
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2016–ம் ஆண்டு அதிக நிலப்பரப்பில் பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். மேலும் அந்த பயிரை பிரதமமந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடும் செய்தனர். இதற்கிடையில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி காய்ந்து கருகியது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. கருகிய பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் செய்த குளறுபடியால் சிறுபாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்ட அடரி, சிறுபாக்கம், வடபாதி உள்ளிட்ட 35 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு இது வரை பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுபாக்கம், எஸ்.புதூர், அரசங்குடி, நரையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று சிறுபாக்கம் பஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் தங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகையை உடனே பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பஸ்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை.
இதனால் விவசாயிகள் தங்களுக்கு விரைந்து பயிர்காப்பீட்டு தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.