மாவட்ட செய்திகள்

18 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு:முதல் தாள் தேர்வில் 5,356 பேர் எழுதினார்கள் + "||" + Teacher Eligibility Examination in 18 Centers: 5,356 people wrote the first paper exam

18 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு:முதல் தாள் தேர்வில் 5,356 பேர் எழுதினார்கள்

18 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு:முதல் தாள் தேர்வில் 5,356 பேர் எழுதினார்கள்
கிரு‌‌ஷ்ணகிரியில் மாவட்டத்தில் 18 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வை 5 ஆயிரத்து 356 பேர் நேற்று எழுதினார்கள்.
கிரு‌‌ஷ்ணகிரி,

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று நடந்தது. நேற்று நடந்த முதல் தாள் தேர்விற்கு கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 18 மையங்களில் 5,356 பேர் தேர்வு எழுதினார்கள். 626 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வந்த தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், மடிக்கணினி, கணக்கிடும் கருவிகள் போன்வற்றை தேர்வறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கிரு‌‌ஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்று கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு-2019 கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, கிரு‌‌ஷ்ணகிரி, ஓசூரில் மொத்தம் 18 மையங்களில் நடக்கிறது. முதல் நாள் தேர்வுக்கு 5 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 626 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வை பறக்கும் படை, முதன்மை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர் என மொத்தம் 733 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

அதே போல இன்று (ஞாயிற்றுக்கிழமை) 36 மையங்களில் நடைபெற உள்ள 2-ம் தாள் தேர்விற்கு 12 ஆயிரத்து 187 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுதும் தேர்வர்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.