7,771 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 771 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதினர்.
திருவண்ணாமலை,
தமிழகம் முழுவதும் நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. தாள்-1 தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை தேர்வர்கள் 8.30 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வு காலை 10 மணி தொடங்கியது. இருப்பினும் சிலர் 10 மணிக்கு வரை வந்து கொண்டே இருந்தனர்.
இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 419 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 7 ஆயிரத்து 771 பேர் தேர்வு எழுதினர். 648 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வுப் பணிக்கு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் என 560 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட்டது. தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ்நாடு பாடநூல் கழக உறுப்பினர் செயலாளரும், இயக்குனருமான பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், பள்ளி துணை ஆய்வாளர் குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-ம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்று நடந்தது.
ஆரணி மையத்தில் 1,553 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,442 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 111 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு மையங்களை ஆரணி மாவட்டக்கல்வி அலுவலர் த.சம்பத் தலைமையில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story