திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா தொடங்கியது


திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 8 Jun 2019 11:00 PM GMT (Updated: 8 Jun 2019 6:58 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா தொடங்கியது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார்.

திருத்துறைப்பூண்டி,

நாம் சாப்பிடும் உணவு நஞ்சாக மாறி நாளுக்கு நாள் பிறந்த குழந்தையிலிருந்து, பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனையை நாடி செல்லும் சூழல் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் நாம் உண்ணும் உணவு நஞ்சற்ற உணவாக இயற்கை உரங்களால் உருவாக்கி இயற்கை உணவுகளை உண்ண வேண்டுமென நம்மை விட்டு மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து மரணமடைந்தார்.

அவரின் வழிகாட்டுதலின் படி திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தை சேர்ந்த நெல் ஜெயராமன் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி வந்தார். விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை எடுத்து கூறி 2 கிலோ இயற்கை விவசாய நெல்லை வழங்கி வந்தார். இந்த விழாவில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் நெல் ஜெயராமன் கடந்த 6.12.2018-ந்தேதி புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 13-வது தேசிய நெல் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் அருகே மாட்டு வண்டியில் பாரம்பரிய நெல் விதைகள் வைக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு வேலுடையார் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தியாகபாரி தலைமை தாங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் ராஜா முன்னிலை வகித்தார். ஊர்வலம் ஏ.ஆர்.வி.தனலட்சுமி திருமண அரங்கில் முடிவடைந்தது.

பின்னர் நடைபெற்ற நெல் திருவிழா கண்காட்சியை தொழிலதிபர் ஏ.ஆர்.வி. நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஏ.ஆர்.வி. விவேக் தொடங்கி வைத்தார்.

இதில் அமைச்சர் ஆர்.காமராஜ், திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் உழவர்கள், சமூக ஆர்வலர்கள் வேளாண்துறையை சேர்ந்த அதிகாரிகள், வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாரம்பரிய விவசாயத்திற்கு பயன்படுத்தும் அனைத்து இடு பொருட்களும், பாரம்பரிய நெல் விதைகள், அரிசி வகைகள் விற்பனை செய்யும் பிரமாண்ட கண்காட்சி நடந்தது. நெல் திருவிழாவில் கலந்துகொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மூலிகை சுக்குகாப்பி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த திருவிழா இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறுகிறது. 

Next Story