தூத்துக்குடி, கோவில்பட்டியில் ஆசிரியர் தகுதி தேர்வை 4,866 பேர் எழுதினர்


தூத்துக்குடி, கோவில்பட்டியில் ஆசிரியர் தகுதி தேர்வை 4,866 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:45 AM IST (Updated: 9 Jun 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவில்பட்டியில் ஆசிரியர் தகுதி தேர்வை 4,866 பேர் எழுதினர்.

தூத்துக்குடி, 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி கல்வி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நடந்தது. இந்த தேர்வுக்கு 5 ஆயிரத்து 446 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வு 13 மையங்களில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்வை 4 ஆயிரத்து 866 பேர் எழுதினர். 580 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தூத்துக்குடியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், தேர்வு எழுத வருபவர்களுக்கு குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு 8-ந் தேதி மற்றும் 9-ந் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்நாள் தேர்வுக்காக 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று (அதாவது நேற்று) நடந்த தேர்வினை 4 ஆயிரத்து 866 பேர் எழுதினர். அதே போல் 9-ந் தேதி (இன்று) நடக்க உள்ள தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 25 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்காக 10 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தேர்வு மையங்களில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் அலுவலர்கள் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் இருந்தனர்.

கோவில்பட்டியில் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வு மொத்தம் 4 மையங்களில் நடந்தது. இந்த தேர்விற்கு மொத்தம் 1,781 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 427 பேரும், நாடார் மேல்நிலைப்பள்ளியில் 454 பேரும், லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளியில் 363 பேரும், கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360 பேரும் என மொத்தம் 1,604 பேர் இந்த தேர்வை எழுதினர். 177 பேர் தேர்வை எழுத வரவில்லை. இந்த தேர்வை பள்ளி கல்வித்துறை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராமசுப்பிரமணியன், கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி மாரியப்பன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story