விருத்தாசலம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணம்; சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த பூதாமூரை சேர்ந்தவர் ராஜவேல். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயலட்சுமி வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஜெயலட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து ஜெயலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் போலீசார் ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை அறிந்த ஜெயலட்சுமியின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர் உறவினர்கள், ஜெயலட்சுமியின் உடலை பார்த்தனர். அப்போது, உடலில் சில இடங்களில் காயம் இருந்ததை பார்த்த உறவினர்கள் திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயலட்சுமியின் சாவில் சந்தேகம் உள்ளது என்றும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர்.
இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.