காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சிதம்பரம் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள ஆட்கொண்டநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன் மகள் திவ்யா (வயது 24). இவரும் சிதம்பரம் அருகே கிள்ளை தைக்கால் பகுதியை சேர்ந்த பாலகுருசாமி மகன் ராஜதீபன்(29) என்பவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் திவ்யாவுக்கும், ராஜதீபனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ராஜதீபன், அவரது தாய் ரேணுகாதேவி ஆகியோர் திவ்யாவை வீட்டில் இருந்து துரத்தி விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் ராஜதீபனுக்கு நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி திவ்யா சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் திவ்யா மண்எண்ணெய் கேனுடன் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் போலீஸ் நிலையம் முன்பு நின்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து திவ்யாவின் கையில் இருந்த தீப்பெட்டியை பிடுங்கினர்.
இதற்கிடையே அங்கு வந்த போலீசார், திவ்யாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.