கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 10-ம் வகுப்பு மாணவி ஆற்றில் மூழ்கி சாவு


கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 10-ம் வகுப்பு மாணவி ஆற்றில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 9 Jun 2019 3:30 AM IST (Updated: 9 Jun 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

பால்கரில் கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 10-ம் வகுப்பு மாணவி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.

வசாய்,

புல்தானா மாவட்டத்தை சேர்ந்தவள் சிறுமி உர்ஜா (வயது 16). 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தாள். கோடை விடுமுறையையொட்டி சிறுமி பால்கர் மாவட்டம் காசா தாலுகா, வகாடி கிராமத்தில் உள்ள மாமா வீட்டுக்கு வந்து இருந்தாள்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை சிறுமி தனது 2 தோழிகளுடன் அந்த பகுதியில் உள்ள சூர்யா ஆற்றுக்கு குளிக்க சென்றாள். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமி தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் மூழ்கினாள். அவளை காப்பாற்ற முயன்ற தோழிகளும் தண்ணீரில் தத்தளித்தனர்.

சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்தனர். அவர்கள் உர்ஜாவின் 2 தோழிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர். ஆனால் உர்ஜா தண்ணீரில் மூழ்கி மாயமானாள்.

உடல் மீட்பு

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், நேற்று மதியம் ஆற்றில் இருந்து சிறுமி பிணமாக மீட்கப்பட்டாள். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story