சிறுமியை திருமணம் செய்து வரதட்சணை கேட்டு சித்ரவதை: போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
புதுவை ரெட்டியார்பாளையத்தில் சிறுமியை திருமணம் செய்து வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்,
புதுச்சேரி லாம்பர்ட் சரவணன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). இவர் புதுவை அரசு பொதுப்பணித்துறையில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்தவர் பார்வையற்ற தம்பதியின் மகளான 15 வயது சிறுமியை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக மணிகண்டன் குடித்துவிட்டு அந்த சிறுமியை அடித்து வரதட்சணைகேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகாரின்பேரில் குழந்தைகள் நல அமைப்பு தலைவர் ராஜேந்திரன், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவிடம் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவின் உத்தரவின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மணிகண்டனை கைது செய்தனர்.