டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்து போகும் அபாயம் விவசாயிகள் கவலை


டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்து போகும் அபாயம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 9 Jun 2019 10:45 PM GMT (Updated: 9 Jun 2019 7:09 PM GMT)

காவிரியில் தண்ணீர் இல்லாததால் தொடர்ந்து 8-வது ஆண்டாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்து போகும் அபாய நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

டெல்டா மாவட்டங்களில் உள்ள 4½ லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. 2012-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியும், 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதியும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதியும், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதியும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதியும், 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதியும், கடந்த ஆண்டு(2018) ஜூலை 19-ந் தேதியும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் ஒருபோக சாகுபடி மட்டும் செய்யக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்பில்லை என்று கூறப்படுகிறது. கர்நாடகத்தில் மழை கொட்டித்தீர்த்து அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி உபரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டால் மேட்டூர் அணைக்கு வந்து சேர 10 நாட்களுக்கு மேலாகும்.

இந்த ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியை கைவிடும் நிலைக்கு வந்துவிட்டனர். இனி மேட்டூர் அணை நிரம்பி காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் களில் தண்ணீர் திறந்து விட்டு கடைமடை வரை சென்று சேருமா? என்பது சந்தேகமே.

கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு போய் பாலைவனம் போல் காணப்படுகிறது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் தொடர்ந்து 8-வது ஆண்டாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்து போகும் அபாய நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுக்கள் அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட 9.19 டிஎம்சி தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடக அரசு எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் மொழிபிரச்சினையில் காட்டும் ஆர்வத்தை கூட காவிரி தண்ணீர் பிரச்சினையில் ஆர்வம் காட்டுவதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். 

Next Story