சிந்தாதிரிப்பேட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த 2 பேர் கைது


சிந்தாதிரிப்பேட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2019 11:45 PM GMT (Updated: 9 Jun 2019 7:45 PM GMT)

சிந்தாதிரிப்பேட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த 2 கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா உதவியால் போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை குருவப்பா தெருவை சேர்ந்தவர் சங்கர்குமார் (வயது 44). பத்திரிகையாளரான இவரது வீட்டில் கடந்த 3-ந்தேதி அன்று பட்டப்பகலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இவரது மனைவி மதியம் 12 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்று தனது குழந்தைகளை அழைத்து வர சென்றார்.

½ மணி நேரத்திற்குள் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். ஆனால் அதற்குள் சங்கர்குமார் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 22 பவுன் தங்க நகைகளை அள்ளி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்குமார் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இணை கமிஷனர் ஜெயகவுரி, துணை கமிஷனர் சுகுணாசிங், உதவி கமிஷனர் பிரபாகர் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், அருணாசலராஜா, சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதற்காக களத்தில் இறக்கப்பட்டனர்.

கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் பற்றி போலீசார் துப்பு துலக்கினார்கள். வியாசர்பாடியை சேர்ந்த லாரன்ஸ் என்ற ஜோஸ்வா (21), தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ் (20) ஆகிய 2 கொள்ளையர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கொள்ளையன் லாரன்ஸ் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை தனது வீட்டின் அருகே புதைத்து வைத்திருந்தார். அந்த நகைகளை போலீசார் தோண்டி எடுத்து மீட்டனர். கொள்ளையர்கள் இருவரும் பட்டப்பகலில் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள். கொள்ளையர்களில் லாரன்ஸ் மெரினாவில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார்.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர். சமீபத்தில்தான் இவர் திருமணம் செய்ததாக தெரிகிறது. இவரது மனைவியின் வேண்டுகோளின்படி பெரிய அளவில் கொள்ளையடித்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொந்தமாக ஆட்டோ வாங்க முடிவு செய்தார். அதற்காக இந்த திருட்டில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

மெரினாவில் காற்று வாங்க வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்கச்சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். லாரன்சும், சதீசும் ஒன்றாக சிறையில் இருந்துள்ளனர். அப்போது நண்பர்களாகி உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்த இவர்கள் திருட்டு தொழிலை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளையன் சதீஷ் தான் வைத்திருந்த நகைகளை போலீசாரிடம் முறையாக ஒப்படைத்துவிட்டார். ஆனால் லாரன்ஸ் ஒருபகுதி நகைகளை மட்டும் தனது வீட்டின் அருகே புதைத்துவிட்டு, மீதி நகைகளை எங்கோ மறைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

இதனால் கொள்ளைபோன நகைகளில் 4½ பவுன் நகைகளை மட்டுமே போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையன் லாரன்சிடம் இருந்து 1 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், மீண்டும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்.

Next Story