மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை; மனைவி கைது


மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை; மனைவி கைது
x
தினத்தந்தி 10 Jun 2019 4:45 AM IST (Updated: 10 Jun 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேவாரம்,

தேனி மாவட்டம் தேவாரத்தை அடுத்த தே.சிந்தலைச்சேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஜெலினாமேரி (47). இவர்களுக்கு ராஜ்குமார் (22) என்ற மகனும், விக்டோரியா (28) என்ற மகளும் உள்ளனர். இதில் விக்டோரியா திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் தனியாக வசிக்கிறார்.

அந்தோணிராஜூக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் வீட்டுக்கு மதுகுடித்துவிட்டு வரும் அவர், மனைவியிடம் தகராறு செய்து வந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு மதுகுடித்துவிட்டு வந்த அந்தோணிராஜ் மனைவியிடம் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் 2 பேரையும் சமாதானப்படுத்தினார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்தோணிராஜ் மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது மனைவி மீது கல்லைப்போட்டு அவர் கொல்ல முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமாரும், ஜெலினாமேரியும் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியால் அந்தோணிராஜை அடித்தனர். இதில் பலத்த காயமடைந்த அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் தேவாரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இதிரிஸ்கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்தோணிராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெலினாமேரியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராஜ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story