‘அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படியே கட்சியும், ஆட்சியும் நடந்து வருகிறது’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி


‘அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படியே கட்சியும், ஆட்சியும் நடந்து வருகிறது’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படியே கட்சியும், ஆட்சியும் நடந்து வருகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. வாரிசு அரசியல் நடத்தும் இயக்கமில்லை. இது தொண்டர்களால் உருவாக்கப்பட்டு தொண்டர்களால் நடத்தப்படுகின்ற இயக்கம். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து நடத்திவரும் இயக்கம் அ.தி.மு.க.

எங்களுடைய இயக்கத்தை மறைந்த எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது தொண்டர்களின் உணர்வுகளுக்கு ஏற்பதான் இயக்கத்தை நடத்தி வந்தார். அதேபோல் ஜெயலலிதாவும், தொண்டர்களின் கருத்தை கேட்டு இயக்கத்தை நடத்தி வந்தார். அ.தி.மு.க.வில் தொண்டர்களின் உணர்வுகள், கொள்கைகளை பிரதிபலிக்கின்ற இடம் பொதுக்குழு. அந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு யார் இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்ற கேள்வி வந்தபோது அதில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டினால் அ.தி.மு.க. 2, 3 அணியாக பிரிந்தது.

அதன் பிறகு மீண்டும் அ.தி.மு.க. சின்னத்தை மீட்க வேண்டும், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அன்றைக்கு பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் சமரசத்தின்படி இணைந்து இந்த இயக்கத்தை அவர்கள் ஒருங்கிணைப்பாளராக, துணை ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தீர்மானத்தின்படி தற்போது அ.தி.மு.க. இயக்கமும், ஆட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா இந்த உலகத்தை விட்டு செல்வதற்கு முன்பு, தனக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் நடத்துவது என்று அவர் யாரையும் கை காட்டிவிட்டுச்செல்லவில்லை. பல்வேறு காலக்கட்டத்தில் பல பணிகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆரும் சரி, தனக்குப்பிறகு இவர்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்தின்பேரிலேயே கட்சியும், ஆட்சியும் நடந்து வருகிறது.

நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. அதற்கான காரணங்களையும் நான் கூறியுள்ளேன். 2 ஆண்டு காலம் பா.ஜ.க., தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டதைப்போன்று எதிர்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வந்தார்கள். ஆனால் பா.ஜ.க. அந்த குற்றச்சாட்டை முறையாக கையாளவில்லை. இந்தியா முழுவதும் வெற்றி பெற்றபோதும், தமிழகத்தில் பா.ஜ.க. மீது ஏற்பட்ட அதிருப்தி, அ.தி.மு.க.விற்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. இதுதான் தோல்விக்கு காரணம். சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக இழக்க நேரிட்டது. என்றைக்கும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story