திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட விலையில்லா வேட்டி–சேலைகள்; 2 பேர் கைது


திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட விலையில்லா வேட்டி–சேலைகள்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு சரக்கு ஆட்டோவில் மூட்டை மூட்டையாக விலையில்லா வேட்டி - சேலைகளை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு,

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விலையில்லா வேட்டி -சேலைகள் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோட்டிற்கு விலையில்லா வேட்டி -சேலைகள் கடத்தி வருவதாக ஈரோடு வருவாய் துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் ஈரோடு பழைய ெரயில்வே நிலையம் ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையின் போது, சரக்கு ஆட்டோவில் தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலைகள் மூட்டை, மூட்டையாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து, ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தது திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பரிசல் துறை பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 36), என்பதும், உரிமையாளர் முசிறி அட்டாரப்பட்டி அம்மன் நகரை சேர்ந்த வைரமுத்து (48) என்பதும் தெரியவந்தது.

மேலும் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இருந்து விலையில்லா வேட்டி, சேலைகளை மூட்டைக்கு 100 என 53 மூட்டைகளில் 5 ஆயிரத்து 300 வேட்டி -சேலைகள் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிக்கு கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு ஆட்டோ மற்றும் டிரைவர், உரிமையாளர் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் மூர்த்தி மற்றும் உரிமையாளர் வைரமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம், விலையில்லா வேட்டி, சேலைகளை திருச்சியில் இருந்து விற்பனைக்கு அனுப்பியது யார்? ஈரோட்டில் யாரிடம் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story