மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடைபெறுவதால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்


மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடைபெறுவதால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்
x
தினத்தந்தி 10 Jun 2019 11:15 PM GMT (Updated: 10 Jun 2019 5:08 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடைபெறுவதால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதை அறியாத பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் நேரில் வந்து தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்குவார்கள். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும் கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி அனைத்து தாலுகாவிலும் ஜமாபந்தி தொடங்கியது. இதனால் நேற்று வழக்கமாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனை அறியாத பொதுமக்கள் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் பார்த்து மனு அளிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் மனு அளிக்க வந்த மக்களுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் போடுவதற்கு பெட்டி ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதில் சிலர் தங்கள் கொண்டு வந்த மனுக்களை செலுத்தினர்.

வருகிற 17-ந் தேதி திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறாது என்றும், 24-ந் தேதி குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என்றும் ஒட்டப்பட்டு இருந்தது.

Next Story