பெரம்பலூர், அரியலூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர், அரியலூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 7:51 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி பெரம்பலூர், அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்,

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் தேவராஜன், பெரம்பலூர் வட்டார தலைவர் செல்லப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ படியை உயர்த்தி வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.

ரத்து செய்ய வேண்டும்

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒருநபர் குழு அறிக்கை வெளியிட வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் வேலுச்சாமி வரவேற்றார். முடிவில் பொருளாளர் டாக்டர் கோசிபா நன்றி கூறினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராமசாமி, மகாலிங்கம், பெரியசாமி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story