தண்ணீர் தட்டுப்பாடு; கழிவுநீரை சுத்திகரித்து ரெயில்களை தூய்மைப்படுத்தும் பணி, தெற்கு ரெயில்வே நடவடிக்கை


தண்ணீர் தட்டுப்பாடு; கழிவுநீரை சுத்திகரித்து ரெயில்களை தூய்மைப்படுத்தும் பணி, தெற்கு ரெயில்வே நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் தட்டுப்பாட்டால் கழிவுநீரை சுத்திகரித்து ரெயில் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக தெற்கு ரெயில்வே பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் தண்ணீரை சேமிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த சுத்திகரிப்பு நிலையம் குறித்து மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை பேசின் பிரிட்ஜ் மற்றும் சேத்துப்பட்டு பணிமனையில் பல்வேறு வகையான ரெயில் பெட்டிகள் தினமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு வரும் ரெயில் பெட்டிகளை கழுவ கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த முடிவு செய்தோம். இதற்காக பேசின் பிரிட்ஜ் மற்றும் சேத்துப்பட்டு பணிமனையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பல்வேறு ரெயில்வேக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் பேசின் பிரிட்ஜ் மற்றும் சேத்துப்பட்டு பணிமனையில் உள்ள ராட்சத கிணறுகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதைத்தொடர்ந்து சுத்திகரிக்கும் நிலையத்தில் அந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் பணிமனையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பேசின் பிரிட்ஜ் பணிமனையில் 4 லட்சம் லிட்டர் தண்ணீரும், சேத்துப்பட்டு பணிமனையில் 2.5 லட்சம் லிட்டர் தண்ணீரும் என ஒரு நாளைக்கு சுமார் 6.5 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அதன் மூலம் ரெயில் பெட்டிகள் கழுவப்படுகிறது. மேலும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தால் வெளியில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

எழும்பூர் மற்றும் சென்டிரலில் இருந்து புறப்படும் ரெயில்களை தூய்மைப்படுத்த மற்றும் ரெயில் பெட்டிகளில் நிரப்ப ஒரு நாளைக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.

இந்த தண்ணீர் தேவையை சமாளிக்கும் வகையில் செங்கல்பட்டில் இருந்து ரெயிலின் 10 பெட்டிகளில் தண்ணீர் தொட்டிகள் வைத்து ஒரு நாளைக்கு 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த தண்ணீர் மூலம் சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில்களில் தண்ணீர் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story