ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சித்தலைவர் தற்கொலை முயற்சி


ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சித்தலைவர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 11 Jun 2019 5:15 AM IST (Updated: 11 Jun 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சித்தலைவர் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த திரளான பொதுமக்கள் தங்களின் குறைகளை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜகோபாலன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பன்னீர்செல்வம், பார்வதி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தனர். அப்போது மனு அளிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் வந்து கொண்டிருந்தனர்.

அந்த வரிசையில் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் பாலவாக்கம் அடுத்த வேலகாபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 50) என்பவரும் மனு அளிக்க வந்தார்.

அப்போது அவர், தான் ஏற்கனவே பலமுறை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு அளித்தும் இதுநாள் வரையிலும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி அதிகாரிகளிடம் தகராறு செய்தார். அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.

இதனால் பதறிப்போன அரசு அதிகாரிகள் உடனே அந்த பெட்ரோல் பாட்டிலை கைப்பற்றினார்கள். பின்னர் உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேசை விசாரணைக்காக திருவள்ளூரில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது ரமேஷ் கூறியதாவது:–

நான் வேலகாபுரம் ஊராட்சியில் 2 முறை ஊராட்சித்தலைவராக இருந்து உள்ளேன். மேலும் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளேன். இந்த நிலையில் வேலகாபுரம் கிராமத்தில் தனிநபர்கள் வழிப்பாதையையும், குளத்தையும், வாய்க்காலையும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

இதுதொடர்பாக நான் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என பலமுறை மனு அளித்தும் இதுநாள்வரையிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த நான் இதற்கு நிரந்தர தீர்வு காணவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story