அடிபம்பிலும், லாரியிலும் தண்ணீர் பிடிப்பதற்காக இரவில் தூக்கத்தை தொலைத்து காத்திருக்கும் சென்னை வாசிகள்


அடிபம்பிலும், லாரியிலும் தண்ணீர் பிடிப்பதற்காக இரவில் தூக்கத்தை தொலைத்து காத்திருக்கும் சென்னை வாசிகள்
x
தினத்தந்தி 10 Jun 2019 10:45 PM GMT (Updated: 10 Jun 2019 7:55 PM GMT)

சென்னை மக்கள் அடிபம்பிலும், லாரியிலும் தண்ணீர் பிடிப்பதற்காக இரவில் தூக்கத்தை தொலைத்து காத்து கிடக்கின்றனர். கூடுதலாக தண்ணீர் வினியோகம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தின் மூளை முடுக்கு பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. வெயிலின் தாக்கம் காரணமாகவும், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாத காரணமாகவும் அணைகள், ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லாமல் போனது.

பல்வேறு அணைகள், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மக்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் அனைத்தும் தரைப்பகுதிகளில் பிளவு ஏற்படும் அளவுக்கு வறண்டு போய்விட்டன.

தண்ணீர் பிரச்சினையை போக்க அரசு தரப்பில் இருந்து குடிநீர் வாரியம் மூலம் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சாதாரண நாட்களில் வினியோகம் செய்யப்பட்ட தண்ணீரின் அளவை விட, அதிகளவில் தற்போது சென்னை பகுதிகளில் குடிநீர் வாரிய லாரிகள் வலம் வருகின்றன.

இருப்பினும், தண்ணீர் பிரச்சினையை முழுவதுமாக தீர்க்க முடியவில்லை. சென்னை வாசிகள் தண்ணீர் கிடைக்கும் இடங்களை தேனீக்கள் மொய்ப் பது போல, குடத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் அடிபம்புகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கும், தனியார் லாரிகளில் வரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவதற்கும் இரவில் தூக்கத்தை தொலைத்து காத்து இருக்கின்றனர்.

அடிபம்புகளில் ஒரு நபருக்கு 3 முதல் 5 குடங்களும் அல்லது 20 லிட்டர் கேன் 3 என்ற அளவிலும் தண்ணீர் பிடிக்கிறார்கள். அதேபோல், லாரிகளில் வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ.2 முதல் ரூ.10 வரையிலான விலையில் வாங்குவதையும் பார்க்க முடிகிறது.

பெரும்பாலான இடங்களில் நள்ளிரவில் தான் அடிபம்புகளில் ஆட்கள் இருக்காது என்று பலர் தண்ணீர் பிடிக்க வருகிறார்கள். ஆனால் அங்கு ரேஷன் கடைகளில் நீண்ட வரிசை நிற்பது போல, குடங்களை வரிசையாக வைத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க ஏற்கனவே பலர் காத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

இரவு தூக்கத்தை தொலைத்து பகல் நேரங்களில் பணிக்கு சென்று உடல் பிரச்சினைகளையும் சிலர் சந்திக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதம் ஏன் வருகிறது? என்று நினைக்கத்தோன்றும் அளவுக்கு தண்ணீருக்காக கஷ்டப்படுகிறோம். இரவில் தண்ணீருக்காக அலைந்து, பகலில் வேலைக்கு சென்று மிகவும் கஷ்டப்படுகிறோம். குடிநீர் வாரியத்தின் மூலம் வரும் லாரிகள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. அவர்கள் சரியான நேரத்தில் வந்து, ஒவ்வொரு நாளும் கூடுதலாக தண்ணீர் வினியோகம் செய்தால் ஓரளவு தட்டுப்பாட்டை போக்க முடியும்’ என்கின்றனர்.

Next Story