நெல்லையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களுக்கு தர்மஅடி


நெல்லையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களுக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 11 Jun 2019 4:15 AM IST (Updated: 11 Jun 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு தப்பிய கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களாக ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களும், ஆட்கள் இல்லாத வீடுகளில் கதவை உடைத்து தங்க நகை, பொருட்களை திருடிச்செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் நேற்று முன்தினம் காலையில் நடந்து சென்ற தேவகி என்பவரிடம் இருந்து 11 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். இதையொட்டி போலீசார் மாநகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்றது.

ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் 2 கொள்ளையர்கள் நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் களத்தில் இறங்கினர். அதாவது நெல்லை அருகே உள்ள ஆரைக்குளத்தை சேர்ந்த தர்மகண் மனைவி ஏஞ்சல் மரியபாக்கியம் என்பவர் மொபட்டில் டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 கொள்ளையர்கள் ஏஞ்சல் மரியபாக்கியத்தை தாக்கி அவரிடம் இருந்து சங்கிலியை பறித்தனர். ஆனால் அவர் உஷார் அடைந்து கூச்சலிட்டார்.

இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அருகில் வந்தனர். பின்னர் கொள்ளையர்கள், தங்க சங்கிலியை போட்டு விட்டு தங்களது மோட்டார் சைக்கிளில் தப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை பொது மக்கள் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் 2 பேருக்கும் தர்ம அடி கொடுத்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த விஜய் சங்கர் (வயது 35) மற்றும் திருச்சியை சேர்ந்தவரும் தற்போது நாகர்கோவிலில் வசித்து வருபவருமான சங்கர் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story