திருப்பூரில், பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - தந்தை திட்டியதால் விபரீத முடிவு
திருப்பூரில் தந்தை திட்டியதால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த அம்மையப்பர்நகரை சேர்ந்தவர் இளையராஜா. இவருடைய மனைவி செல்வராணி. இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுடைய மகன் நளின் (வயது 16). இவன் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று காலை நளின் அவனுடைய வீட்டு வாசல் முன்பு தண்ணீரை கொட்டியதாக கூறப்படுகிறது. அதை கண்ட இளையராஜா, நடமாடும் இடத்தில் ஏன் இப்படி தண்ணீரை கொட்டி இருக்கிறாய்? என்று கேட்டதுடன் நளினை திட்டயதாக தெரிகிறது. இதனால் நளின் தந்தையிடம் கோபித்து கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டான். மேலும் அவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான்.
பள்ளிக்கு ஏன் செல்லவில்லை என்று பெற்றோர் கேட்டபோது மதியம் பள்ளிக்கு செல்கிறேன் என்று அவன் கூறி உள்ளான். இதையடுத்து இளையராஜாவும், செல்வராணியும் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு சென்ற செல்வராணி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
எனவே அவர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போது நளின் வீட்டில் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான். இதை கண்ட செல்வராணி கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நளின் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் தந்தை திட்டியதால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story