ரெயில் பயணிக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு


ரெயில் பயணிக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 3:00 AM IST (Updated: 11 Jun 2019 6:26 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் படுக்கைக்கு செல்ல ஏணி வசதி இல்லாததால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

நெல்லை, 

ரெயிலில் படுக்கைக்கு செல்ல ஏணி வசதி இல்லாததால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ரெயில் பயணி 

பாளையங்கோட்டை சாந்திநகர் 4–வது மெயின் தெருவை சேர்ந்தவர் வருசை இக்பால் (வயது 67). இவர் கடந்த 2017–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13–ந்தேதி சென்னையில் இருந்து நெல்லை வருவதற்காக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய ரூ.455 கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்தார். அவருக்கு எஸ்–1 பெட்டியில் 27–வது மேல் படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட தேதியில் பயணம் செய்வதற்காக வருசை இக்பால் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். ஆனால் அவருக்கு உரிய மேல் படுக்கைக்கு செல்வதற்கு உரிய ஏணி வசதி இல்லை. இதுகுறித்து ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கீழே படுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ரூ.20 ஆயிரம் 

இதையொட்டி இரவு முழுவதும் அவதிப்பட்டு நெல்லைக்கு வந்து சேர்ந்துள்ளார். மறுநாள் 14–ந்தேதி வருசை இக்பால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளரிடம் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ரெயில்வே துறையை சேர்ந்த 7 அதிகாரிகள் மீது வருசை இக்பால், வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்கள் முத்துலட்சுமி, சிவன்மூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தி, வருசை இக்பாலுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.15 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரத்தை 7 அதிகாரிகளும் நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டனர்.

Next Story