தென்மேற்கு பருவமழை தீவிரம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


தென்மேற்கு பருவமழை தீவிரம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 12 Jun 2019 4:30 AM IST (Updated: 11 Jun 2019 8:17 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குழித்துறை,

குமரி மாவடத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 8–ந்தேதி தொடங்கியது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் தடிக்காரன்கோணம்–குலசேகரம் சாலையில் மண்அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், தோவாளை பகுதியில் நாகம்மாள் என்பவரது வீடு, கொல்லங்கோடு பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன் விற்பனை செய்யும் இடம் ஆகியவை இடிந்தன.

 மேலும், குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டியதால் அங்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு பேரூராட்சி ஊழியர்கள் பாதுகாப்பாக நின்றனர்.


 நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, அருமனை, மேல்புறம் குலசேகரம், தக்கலை, கருங்கல், கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர் மழையின் காரணமாக ரப்பர், வாழை, தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக வெட்டுமணிக்கும்–குழித்துறைக்கும் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணையான சப்பாத்துபாலம் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வெட்டுமணியில் இருந்து குழித்துறைக்கும், குழித்துறையில் இருந்து வெட்டுமணிக்கும் தடுப்பணை வழியாக இருசக்கர வாகனங்களிலும், பொதுமக்கள் நடந்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், பாதுகாப்பு கருதி சப்பாத்து பாலம் பகுதியில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘வாயு‘ என பெயரிடப்பட்டுள்ளது. புயல் உருவாகியதை தொடர்ந்து நேற்றும் கொல்லங்கோடு நீரோடி காலனி, வள்ளவிளை, இரையுமன்துறை உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்புச் சுவர் மீது மோதி சிதறியது. சீற்றம் காரணமாக கரைமடி வலை கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் கடல் சீற்றம் காரணமாக நீரோடி காலனி, வள்ளவிளை ஆசிய பகுதிகளில் ராட்சத அலையில் மீனவர்கள் வீடுகள் அடித்து செல்லப்படுகிறது. எனவே, மீன்வ மக்கள் காக்க நிரந்தர தீர்வு காணும் வகையில் அப்பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story