விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்ட பணம், மீண்டும் அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றம்: விவசாயிகள் போராட்டம்


விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்ட பணம், மீண்டும் அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றம்: விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2019 3:30 AM IST (Updated: 12 Jun 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகக் கூறி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் மீண்டும் அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதால் விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

யாதகிரி,

சகாபுரா டவுனில், விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகக் கூறி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் மீண்டும் அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா சாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா. விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக சகாபுரா டவுனில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி, நான் முதல்-மந்திரியானால் விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வேன் என்று அறிவித்தார்.

அதன்படி கடந்த ஆண்டு(2018) நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தும், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார்.

முதல்-மந்திரி ஆன பின்பு அவர் தான் சொன்னபடி விவசாயக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகக் கூறி விவசாயி சிவப்பாவின் வங்கி கணக்கிற்கு ரூ.50 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.

அதன்பின் ஒரு மாதம் கழித்து ரூ.43 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. அதன்படி தான் வாங்கிய விவசாய கடனில் ரூ.93 ஆயிரத்தை குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தள்ளுபடி செய்துவிட்டதாக சிவப்பா நினைத்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களில் சிவப்பாவின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த ரூ.93 ஆயிரமும் மீண்டும் அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டு பின்னர் அது அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவப்பா உள்பட விவசாயிகள் அனைவரும் நேற்று காலையில் சகாபுரா டவுனில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மேலாளரை சந்தித்து முறையிட்டனர். அப்போது இதற்கும், வங்கிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், இதுபற்றிய விவரங்களை நீங்கள் மாவட்ட வருவாய்த்துறையினரை அணுகி பெற வேண்டும் என்றும் கூறி வங்கி மேலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

ஆனால் அதை ஏற்காத விவசாயிகள் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறி எங்களுடைய வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த பணம் அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு விட்டதாக வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள். இதில் என்ன மர்மம் உள்ளது என்று தெரியவில்லை. இதை முதல்-மந்திரி குமாரசாமி தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று கூறினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story