உயர் அழுத்த மின்சாரம் தாக்கி பரிதாபம் : பக்கத்து வீட்டுக்குள் தூக்கி வீசப்பட்ட கோழிக்கடை உரிமையாளர்
தாராவியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் கோழிக்கடை உரிமையாளர் ஒருவர் மேற்கூரையை உடைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் விழுந்தார்.
மும்பை,
மும்பை தாராவி தோபிகாட் ஜீவன் ஜோதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாருக் குரேஷி(வயது45). கோழிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் போது இவரது குடிசை வீடு ஒழுகியது. இதையடுத்து மழைநீர் ஒழுகாமல் இருப்பதற்காக அவர் நேற்று காலை தனது வீட்டின் மேற்கூரையில் ஏறி தார்பாய் விரித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது, வீட்டின் மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அருகே அவர் சென்று விட்டார்.
இதில், மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர், பக்கத்து வீட்டு மேற்கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்தார். மேற்கூரை உடைந்து விழுந்ததில் அந்த வீட்டில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த ராம்கேத்திரே யாதவ்(53), அந்த வீட்டில் வசித்து வரும் கவிதா(30), சீத்தல் (20), பராச்சி(10) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்துடன் துடித்து கொண்டிருந்த பாருக் குரேஷியை மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தாராவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story