நல்லம்பள்ளி அருகே மண் கடத்திய லாரியை மடக்கி பிடித்த கலெக்டர் மலர்விழி


நல்லம்பள்ளி அருகே மண் கடத்திய லாரியை மடக்கி பிடித்த கலெக்டர் மலர்விழி
x
தினத்தந்தி 12 Jun 2019 4:30 AM IST (Updated: 12 Jun 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே மண் கடத்திய லாரியை கலெக்டர் மலர்விழி மடக்கி பிடித்தார்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த இண்டூர் பகுதியிலிருந்து பழுதான டிப்பர் லாரி மூலம் சுமார் 4 யூனிட் நொரம்பு மண்ணை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த லாரி தடங்கம் தனியார் பள்ளி முன்பு உள்ள ஓசூர் - சேலம் பைபாஸ் சாலை வழியாக நல்லம்பள்ளி நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது பங்களாவிற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி காரில் சென்று கொண்டிருந்தார். அவருடைய காருக்கு முன்னால் சாலையில் நொரம்பு மண் கொட்டிய நிலையில் லாரி சென்று கொண்டிருந்தது. இதை கண்ட கலெக்டர் மலர்விழி அந்த லாரியை மடக்கி பிடித்தார்.

பின்னர் விசாரித்தபோது நொரம்பு மண் கொண்டு செல்வதற்குரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

பறிமுதல்

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி, நல்லம்பள்ளி தாசில்தார் இளஞ்செழியனுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அந்த லாரியை நல்லம்பள்ளி தாசில்தார் இளஞ்செழியன் பறிமுதல் செய்து தனது அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த லாரியை ஓட்டி வந்த இண்டூர் நத்தஅள்ளி பகுதியை சேர்ந்த மரகதவேல் (வயது 30) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நொரம்பு மண் எந்த பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், யார் அனுமதி வழங்கியது என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்தி வருகிறார். நொரம்பு மண் கடத்திச்சென்ற லாரியை மாவட்ட கலெக்டரே மடக்கி பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story