கொருக்குப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


கொருக்குப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 12 Jun 2019 4:45 AM IST (Updated: 12 Jun 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

கொருக்குப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலிக்குடங் களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள திருநாவுக்கரசு தோட்டம், பெருமாள் தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. குடிநீர் தட்டுப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன்பேரில் அவ்வப்போது தண்ணீர் லாரிகள் மூலம் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே அரைகுறையாக தண்ணீர் வழங்கி வந்தனர்.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டால் தொலை பேசியை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் லாரிகள் மூலம் சீராக தண்ணீர் வினியோகிக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story