நடிகர் சங்கத்தேர்தலில் ஆதரவு ரஜினி, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் நடிகர் விஷால் பேட்டி


நடிகர் சங்கத்தேர்தலில் ஆதரவு ரஜினி, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் நடிகர் விஷால் பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2019 4:45 AM IST (Updated: 12 Jun 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சங்கத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு? என்று ரஜினியும், கமல்ஹாசனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் 26 சென்ட் இடம் வாங்கப்பட்டது. இந்த இடத்தை முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு ஒப்புதல் பெறாமல் விற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தபிறகு, சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் இதுகுறித்து காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார்.

ஐகோர்ட்டு உத்தரவுபடி காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நடிகர் சங்கத்தலைவர் நாசர் காஞ்சீபுரம் போலீசில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் விஷாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் படப்பிடிப்பு இருப்பதால் வேறொரு நாளில் ஆஜராவதாக கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் நடிகர் விஷால் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று நேரில் ஆஜராகி, நிலம் தொடர்பான ஆவணங்களை போலீசாரிடம் வழங்கினார்.

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:

அனைத்து துறைகள் போலவே சினிமாவிலும் வெற்றி, தோல்வி என்பது உள்ளது. இது வியாபாரம் என்பதால் வெற்றி, தோல்வி என்பது இருக்கத்தான் செய்யும். இதில் புதிதாக எந்த மாற்றமும் கிடையாது. நடிகர் சங்கத்தேர்தலில் ரஜினியும், கமல்ஹாசனும் தங்களது ஆதரவு யாருக்கு? என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை, வதந்தி பரப்ப வேண்டாம்.

நடிகர் சங்க தேர்தல் எப்போது நடந்தாலும் எதிரணி என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு அணியும் என்ன செய்திருக்கிறோம் என்பதை மற்ற நடிகர்களிடம் சொல்வது கட்டாயமாக இருக்கும். அதேபோன்று நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதையும், மற்ற நடிகர்களிடம் பகிர்ந்து உள்ளோம்.

அதன் அடிப்படையில் சக நடிகர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். நடிகர் சங்கக்கட்டிடம் கட்டி முடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் தடையாக வந்து அமைகிறது. அதில் ஏதேனும் ஒரு குறையை கண்டுபிடித்து அதற்காக தடை விதிக்கிறார்கள். அதையும் தாண்டி எந்த விதிமீறலும் இல்லை என்பதை நிரூபித்து அதை கோர்ட்டு வாயிலாக வெளிக்கொண்டு வரும்போது காலதாமதம் ஏற்படுகிறது. நிச்சயமாக இந்த வருடம் நடிகர் சங்கக் கட்டிட திறப்பு விழா நடைபெறும்.

இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.


Next Story