கோவிலம்பாக்கத்தில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி; லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்


கோவிலம்பாக்கத்தில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி; லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2019 10:15 PM GMT (Updated: 11 Jun 2019 9:04 PM GMT)

கோவிலம்பாக்கத்தில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இதனால் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் அருகே உள்ள நன்மங்கலத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 50). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.

மோட்டார் சைக்கிளில் ஸ்ரீதர் கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் விடுதலை நகரில் வந்தபோது முன்னால் சென்ற கழிவுநீர் லாரி உரசியதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது கழிவுநீர் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீதர் பரிதாபமாக பலியானார்.

இதை கண்டதும் கழிவுநீர் லாரி டிரைவர் வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த பள்ளிக்கரணை மற்றும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

அப்போது இப்பகுதியில் கழிவுநீர் லாரி, தண்ணீர் லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் லாரிகளை இப்பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என போலீசாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story