தாய்-மகள் உள்பட 3 பெண்களை தாக்கி நகை பறித்த 2 கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு சிறை


தாய்-மகள் உள்பட 3 பெண்களை தாக்கி நகை பறித்த 2 கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 12 Jun 2019 3:45 AM IST (Updated: 12 Jun 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே தாய்-மகளை தாக்கி நகை பறித்த 2 கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள பெருமணம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் தி.வலசை பகுதியை சேர்ந்த அன்பரசிக்கும் (வயது 28) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தி.வலசையில் உள்ள தாய் செந்தாமரை (45)வீட்டிற்கு அன்பரசி தனது குழந்தையுடன் சென்றார்.

அன்று இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை சுமார் 2 மணியளவில் நிர்வாண நிலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் அன்பரசியின் தாலி சங்கிலியை பறித்துள்ளனர். அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்பரசி கூச்சலிட்டார். அவரை மர்ம நபர்களில் ஒருவர் பலமாக தாக்கியதில் அன்பரசி தலையில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

நகை பறிப்பு

மேலும் அருகில் இருந்த செந்தாமரையும் கூச்சலிட்டதை அடுத்து அவரையும் மர்ம நபர்கள் தாக்கினர். பின்னர் அவர்கள், அன்பரசியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, குழந்தையின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலி மற்றும் 2 வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினர்.

அப்போது அதே பகுதியில் இருந்த மணிமேகலை(60) என்பவர் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். அவர்கள் மணிமேகலையையும் கீழே தள்ளிவிட்டு காலில் கல்லை போட்டு விட்டு தப்பி ஓடினர். இதில் மணி மேகலைக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலை அம்பேத்கர் நகரை சேர்ந்த பாபு என்ற மன்சூர் (28), அத்திபாக்கம் கல்லறை மேடு பகுதியை சேர்ந்த அன்பு (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி சங்கர் ேநற்று இந்த வழக்கில் பாபுவிற்கும், அன்புவிற்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரத்து 500 அபராதமாக விதித்தும் தீர்ப்பு கூறினார்.


Next Story