தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வாகன சோதனையில் ரூ.31 லட்சம் அபராதம் 221 வாகனங்கள் பறிமுதல்


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வாகன சோதனையில் ரூ.31 லட்சம் அபராதம் 221 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jun 2019 3:45 AM IST (Updated: 13 Jun 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.31¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 221 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று தஞ்சை சரக போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

சென்னை போக்குவரத்து ஆணையர் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்கள் அறிவுரைப்படி கடந்த மாதம்(மே) தஞ்சை போக்குவரத்து துணை ஆணையர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இதில் கடந்த மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மொத்தம் 8 ஆயிரத்து 788 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் 1,343 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. இதில் ரூ.31 லட்சத்து 35 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.

அதில் உடனடியாக ரூ.15 லட்சத்து 43 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டது. தமிழகத்துக்கு முறையாக வரி கட்டாமல் இயக்கப்பட்ட சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்கள், மற்றும் வாகன உரிமையாளர்களிடம் இருந்து சாலை வரியாக ரூ.15 லட்சத்து 92 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டது.

அதிக ஆட்களை ஏற்றிச்சென்ற 107 வாகனங்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாத 363 வாகனங்களை ஓட்டியவர்கள், காப்புச்சான்று இல்லாத 251 வாகனங்கள், கண் கூசும் முகப்பு விளக்கு பொருத்திய 105 வாகனங்கள், ஒளிரும் சிவப்பு பிரதிபலிப்பு நாடா இல்லாத 141 வானங்கள், தகுதிச்சான்று இல்லாத 116 வாகனங்களுக்கும் தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு குற்றங்களுக்காக 221 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிக வேகமாக வாகனம் ஓட்டிய 40 பேருக்கும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 148 பேருக்கும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 14 பேருக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 252 பேருக்கும், அதிக எடை ஏற்றி இயக்கிய 134 வாகன ஓட்டிகளுக்கும் தணிக்கை அறிக்கை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது அதிக ஒளி தரக்கூடிய முகப்பு விளக்குகள் வாகனங்களில் பொருத்தி இயக்குவதால் அதிக அளவில் விபத்து நடப்பதால் மேற்படி விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை அறிக்கை வழங்கியும், பொருத்தப்பட்ட எல்.இ.டி. விளக்குகளை நீக்கியும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே எல்.இ.டி. விளக்குகள் வாகனங்களில் பொருத்த வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story