மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் விரக்தி: மனைவி, மகனுடன் நகை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் விரக்தி: மனைவி, மகனுடன் நகை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Jun 2019 5:00 AM IST (Updated: 13 Jun 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் விரக்தி அடைந்த நகை தொழிலாளி மனைவி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் கொட்டுப்பாளைய தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). நகை தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி(40). இவர்களுடைய மகன் ஜெகதீஸ்வரன்(12). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

செந்தில்குமார் தனது மனைவி மற்றும் மகனுடன் நாகை வீரிக்குள தெருவில் ஒரு வீட்டின் மேல்தளத்தில் உள்ள குடிசையில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

நேற்று மதியம் செந்தில்குமார், லட்சுமி, ஜெகதீஸ்வரன் ஆகிய 3 பேரும் வாயில் நுரை தள்ளியபடி தங்களுடைய வீட்டில் பிணமாக கிடப்பதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரமே‌‌ஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று செந்தில்குமார் மற்றும் அவருடைய மனைவி, மகனின் உடல்களை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் செந்தில்குமார் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

நகை செய்யும் தொழிலாளியான செந்தில்குமாருக்கு கடன் அதிகமாக இருந்தது. போதிய வருமானமும் இல்லை என தெரிகிறது. இதனால் மகன் ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

இதனால் விரக்தி அடைந்த செந்தில்குமார், மனைவி மற்றும் மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி செந்தில்குமார், லட்சுமி ஆகியோர் தங்களுடைய மகன் ஜெகதீஸ்வரனுக்கு வி‌‌ஷத்தை கொடுத்து விட்டு தாங்களும் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செந்தில்குமார் தங்கியிருந்த வீட்டின் உள்ளே கிடந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நகை தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகை பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story