தண்ணீர் திருடப்படுவதால், வறண்டு கிடக்கும் முல்லைப்பெரியாறு - குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு


தண்ணீர் திருடப்படுவதால், வறண்டு கிடக்கும் முல்லைப்பெரியாறு - குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 3:30 AM IST (Updated: 13 Jun 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீர் திருடப்படுவதால் ஆறு வறண்டு கிடக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது.

தேனி,

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 112.20 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 1,263 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 243 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது.

சில நாட்களாகவே அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குடிநீருக்காக திறந்து விடும் இந்த தண்ணீரை பலரும் தங்களின் விவசாய தேவைக்காக மோட்டார்கள் வைத்து திருட்டுதனமாக பயன்படுத்தி வருகின்றனர்.

வழக்கமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக நெல் சாகுபடி பணிக்கு ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், அணையில் போதிய நீர்இருப்பு இல்லை என்று கூறி இன்னும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால், பலரும் தங்களின் விவசாய தேவைக்காக ஆற்றில் இருந்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கின்றனர்.

இதன் விளைவாக வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, தேனி பகுதிகளில் ஆறு வறண்டு கிடக்கிறது. பழனிசெட்டிபட்டி தண்ணீர் தொட்டி அருகில் முல்லைப்பெரியாறு தடுப்பணை பகுதி தண்ணீர் இன்றி வறண்டு ஆறு மணல் படுகையாக காட்சி அளிக்கிறது.

இந்த பகுதியில் தினமும் பலர் குளிக்க வருவார்கள். ஆனால், தற்போது குறைவான தண்ணீரே தேங்கி கிடக்கிறது.

அத்துடன் உறைகிணற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. உறைகிணற்றை சுற்றிலும் தண்ணீர் இல்லை. இதன் காரணமாக ஆறுகளை நம்பி இருக்கும் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வைகை ஆறு ஏற்கனவே வறண்டு கிடக்கும் நிலையில், முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீரும் வராததால் குன்னூர் பகுதியில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டிப்பட்டி-சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு போதிய அளவில் தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

எனவே, மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆற்றில் தண்ணீர் திருட்டு நடக்காமல் தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story