விநாயகர் கோவில் கட்ட ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு; பணிகள் நிறுத்தம் போலீசார் குவிப்பால் பரபரப்பு


விநாயகர் கோவில் கட்ட ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு; பணிகள் நிறுத்தம் போலீசார் குவிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 4:15 AM IST (Updated: 13 Jun 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை நிர்மலா நகரில் விநாயகர் கோவில் கட்ட ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ளது நிர்மலா நகர். இந்த பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த குடியிருப்போர்களுக்காக அங்கு பொது இடம் ஒதுக்கப்பட்டது.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் நிர்மலா நகர் குடியிருப்போர் சங்கத்தினர் கற்பக விநாயகர் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக அங்கு 2 மாதத்துக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான பொருட்களையும் கொண்டு வந்து இறக்கினர்.

இந்த நிலையில் நேற்று கட்டிடம் கட்டுவதற்காக குழிதோண்டும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு சமூகத்தினர், அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது. அதில் அனுமதி இல்லாமல் கோவில் கட்டுவதாக போலீசில் புகார் செய்தனர். பின்னர் போலீசாருடன அங்கு வந்து கட்டிட பணியை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து குடியிடிருப்போர் நல சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சிவசாமி பிரகதீஸ்வரர், துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சக்திவேல் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த மோகனசுந்தரம், ஈசானசிவம், பாலமுருகன் மற்றும் குடியிருப்பு வாசிகளும் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாசில்தார் அருணகிரி சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இருதரப்பினரிடமும் அந்த இடம் தொடர்பான ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்தார்.

அப்போது குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அந்த இடம் தொடர்பான ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்தனர். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினர், மாலையில் ஆவணங்களை கொண்டு வந்து காண்பிப்பதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், செந்தில்குமார், செங்குட்டுவன் மற்றும் போலீசார், அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

நிர்மலா நகர் பகுதியில் குடியிருப்பவர்களுக்காக பொதுவான இடமாக 3 இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு இடமான 2,800 சதுரஅடி உள்ள இடத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்ட முயற்சி செய்தோம். அதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தங்களுக்கு சொந்தமான இடம் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இடங்களில் வழக்கு தொடர்ந்தும் அந்த இடம் குடியிருப்போர் நல சங்கத்துக்கு சொந்தமானது என உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த இடத்துக்கான முறையான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story