முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு; தந்தை –மகனுக்கு வலைவீச்சு


முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு; தந்தை –மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Jun 2019 4:00 AM IST (Updated: 13 Jun 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை–மகன் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணா (வயது 23). இவர், தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (20) என்பவரது மோட்டார் சைக்கிள் மீது இடிப்பதுபோல வந்ததாக கூறப்படுகிறது.

பதிலுக்கு லோகேசும் அதுபோல் செய்து வந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இந்த முன்விரோதம் காரணமாக லோகேஷ், தனது தந்தை மணி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கோபிகிருஷ்ணாவின் வீட்டுக்கு சென்று, அவருடன் பேசவேண்டும் எனக்கூறி வெளியே அழைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் கோபிகிருஷ்ணாவின் கழுத்து, தலை, கை, கால் என உடலில் பல இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததால் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கோபிகிருஷ்ணா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லோகேஷ், அவரது தந்தை மணி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.


Next Story