கணவர், குழந்தைகளுடன் மாடியில் தூங்கிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
திருப்போரூர் அருகே கணவர், குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் தூங்கிய பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச்சங்கிலியை பறித்ததோடு, வீட்டுக்குள் புகுந்து பணத்தையும் திருடிச்சென்று விட்டனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பரிமளா.
நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு சாவியை தலையணையில் வைத்துக்கொண்டு கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை மர்ம நபர்கள் மொட்டை மாடிக்கு சென்று பரிமளா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை நைசாக பறித்தனர். பின்னர், அவர் தலையணையில் வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
அங்கு பீரோவில் இருந்த ஒரு வெள்ளிக்கொலுசு, ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.3 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் காலையில் எழுந்து பார்த்தபோதுதான் மகாலிங்கம் மற்றும் அவரது மனைவிக்கு தெரிந்துள்ளது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்டலம் கிராமத்தில் வீடுகள் அதிகம் சூழ்ந்த இடத்தில் அதிகாலையில் தூக்கத்தில் இருந்தபோது மர்ம நபர்கள் பெண் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்ததோடு, வீட்டில் இருந்த பணத்தையும் திருடிச்சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.