நீதிமன்றங்களில் வழக்குகள் குறைய வேண்டும் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி பேச்சு


நீதிமன்றங்களில் வழக்குகள் குறைய வேண்டும் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி பேச்சு
x
தினத்தந்தி 13 Jun 2019 4:30 AM IST (Updated: 13 Jun 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றங்களில் வழக்குகள் குறைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி திறந்து வைத்தார்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை கடந்த 1995-ம் ஆண்டு புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டது. அப்போது முதல் செந்துறையில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் செந்துறையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து செந்துறை மேலராஜ வீதியில் உள்ள தனியார் கட்டிடத்தில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்குகள் குறைய வேண்டும்

விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி பேசுகையில், மக்களை தேடி நீதிமன்றம் என்ற வகையில், உங்கள் ஊருக்கு இந்த நீதிமன்றம் வந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்குகள் குறைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதே சமயத்தில் நீதிமன்றம் சார்ந்த பல்வேறு பணிகள் உள்ளன. அதனை இப்பகுதி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், இந்த நீதிமன்றம் வந்துள்ளதால் வருவாய்த்துறையில் இருந்து வரும் வழக்குகளை விரைவாக முடிக்க ஏதுவாக இருக்கும். இந்த நீதிமன்றத்திற்கு வழக்குகளே வராமல் இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும், என்றார்.

நீதிமன்ற பணிகள் தொடங்கின

புதிதாக திறக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தில் செந்துறை தாலுகாவில் உள்ள செந்துறை, இரும்புலிக்குறிச்சி, தளவாய் மற்றும் குவாகம் போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குற்ற சம்பவங்கள் மற்றும் நில உடைமை உள்ளிட்ட சிவில் வழக்குகள் விசாரிக்கப்படும். ஏற்கனவே இப்பகுதியில் இருந்து அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும், செந்துறை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் வரவேற்றார். திறப்பு விழா முடிந்ததும், நீதிமன்ற பணிகள் தொடங்கின.

செந்துறை நீதிமன்றத்தின் முதல் நீதிபதி மாணிக்கம் இருக்கையில் அமர்ந்து, வழக்கு விசாரணை மேற்கொண்டார். திறப்பு விழாவில் அரியலூர் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் பழனிச்சாமி, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் செல்வராஜ், ஜெயங்கொண்டம் வக்கீல்கள் சங்க தலைவர் ஜெயராமன், ஜெயங்கொண்டம் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story