கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் வேன்களை போலீசார் ஆய்வு


கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் வேன்களை போலீசார் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:00 PM GMT (Updated: 12 Jun 2019 11:56 PM GMT)

கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் வேன்களை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

கடலூர், 

கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்று வரும் தனியார் வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பண்டைராஜ் கலந்துகொண்டு டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது வேன் டிரைவர்கள் தங்கள் வாகனங்களில் முன்பக்கம் பள்ளி அல்லது கல்லூரிப் பணி என்ற பலகை வைத்திருக்க வேண்டும். சீருடை அணிந்துதான் வாகனம் ஓட்ட வேண்டும். ஓட்டுனர் உரிமம், வாகன அனுமதிசான்று, மாசுகட்டுப்பாட்டு சான்று உள்ளிட்ட ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல கூடாது. செல்போனில் பேசிக்கொண்டோ, குடிபோதையிலோ வாகனங்களை ஓட்ட கூடாது. பெற்றோர் உங்களை நம்பித்தான் மாணவ-மாணவிகளை அனுப்பி வைக்கிறார்கள். எனவே நீங்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் அணிவகுத்து நின்ற வேன்களை, ஒவ்வொன்றாக போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்தந்த வேன் டிரைவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா? வாகன அனுமதி சான்று, மாசு கட்டுப்பாட்டு சான்று உள்ளிட்ட ஆவணங்கள் இருக்கிறதா என்பதை சரிபார்த்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், மகாலிங்கம் மற்றும் போக்குவரத்து போலீசார், வேன்டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். 

Next Story